Thursday 6 June 2013

குழந்தை இலக்கியத்தில் கதைப் பாடல்கள்

குழந்தைகள் கதைகளையும் விரும்புகிறார்கள்; பாடல்களையும் விரும்புகிறார்கள். கதைகளும் பாடல்களும் சேர்ந்திருந்தால் இன்னும் அதிக அதிகமாக விரும்புவார்கள், அல்லவா! இவ்வாறு கதை என்ற பாலும் பாடல் என்ற தேனும் கலந்து உருவானதுதான் கதைப் பாடல்.

1950-60களில் தொடக்கப் பள்ளியில் படித்தவர்கள்,
'பாட்டியின் வீட்டுப் பழம் பானை - அந்தப்
                பானையின் ஒருபுறம் ஓட்டையடா!'
என்ற பாடலை மறந்திருக்க மாட்டார்கள். மறதியில் மன்னன் என்று பெயர் வாங்கியவர்களுக்குக் கூட நாலு வரிகளாவது நினைவில் இருக்கும்.

கவிமணி எழுதிய 'நெற்பானையும் எலியும்' என்ற கதைப்பாடலில் வரும் வரிகள்தான் மேலே உள்ளவை. 16 வரிகளில் அற்புதமாகக் கதையும் சொல்லி ஒரு நீதியையும் சொல்லியிருப்பார் கவிமணி, 'ஊகமுள்ள காகம்' போன்ற ஐந்து கதைப் பாடல்களைத்தான் கவிமணி எழுதியுள்ளார். மிகக் குறைந்த படைப்புகள் என்றாலும் அவருக்கு நிறைந்த புகழை பெற்றுத்தந்தவை அவை. கதைப் பாடல்களைக் குழந்தைகள் விரும்புவதற்குக் காரணமாக அமைந்தவை அவை.

கதைப் பாடல்களின் வெற்றி குழந்தைக் கவிஞர்களைக் கதைப் பாடல்கள் எழுதத் தூண்டின எனலாம். ஆடு, மாடு, கோழி, கிளி, நிலா காற்றாடி என்று தனிப் பாடல்களை எழுதிய பிறகு கடைசியில் இரண்டு கதைப்பாடல்களை எழுதிச் சேர்ப்பது வழக்கமாயிற்று.

இவ்வாறு ஒரு வழக்கத்தைத் தோற்றுவித்த கவிமணிக்கு முன்பாக யாராவது கதைப்பாடல்கள் எழுதியிருக்கிறார்களா என்று ஆராய்ந்தால் முதலில் கதைப்பாடல் எழுதிய பெருமையை வீரமார்த்தாண்ட தேவர் பெறுகிறார். 19ஆம் நூற்றாண்டிலேயே பஞ்ச தந்திரக் கதைப்பாடல்களைத் தேவர் எழுதினார். கவிமணியின் கதைப்பாடலோடு ஒப்பிடும் போது இப்பாடல்கள் கடினமாக சொற்களில் இருந்தன. பொழிப்புரை, பதவுரை தேவைப்பட்டன. எளிய சொற்களும் சந்த நயமுமே கதைப்பாடல்களைக் குழந்தைகளின் மனதில் நிலைநிறுத்த உதவும் என்பது கவிமணியின் கதைப்பாடல்களைப் படிப்பவர்களுக்குப் புரியும்.

அன்றைய நடுநிலைப்பள்ளித் தமிழ்த் பாடப்புத்தகங்களில் செய்யுள் பகுதிகளில் கதைப்பாடல்கள் இடம்பெற்றது போல், தொடக்கப்பள்ளித் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் 'ஊகம் உள்ள காகம்' கதை 'காகமும் நரியும்' கதை 'நரியும் திராட்சைத் தோட்டமும்' கதை படக் கதைகளாக இடம் பெற்றன.
கதையும் பாடலும் சேர்க்கையைப் போல் கதையும் படமும் சேர்க்கையும் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தது. கதையை எளிதாகப் புரிந்து கொள்ளவும் கதாபாத்திரங்களை உருவங்களாகக் காணவும் படங்கள் உதவுவதால் படக்கதைகள் குழந்தைகள் மத்தியில் பிரபலமாயின. படக்கதைகள் குழந்தைகளின் வாசிக்கும் பழக்கத்தையும் அதிகப்படுத்தின. ஆனால் படக்கதைகள் ‘காமிக்ஸ்' ஆக உருவெடுத்த போது அவற்றின் உள்ளடக்கம் மாய உலகைக் காட்டிடும் போக்காக உருவானது. எதார்த்தத்தை மறைத்தல் அல்லது மறக்கடித்தலுக்கு உதவும் வேலையையே ‘காமிக்ஸ்' கதைகள் செய்தன. மனிதனுக்கு எதிரியாக நிஜ வாழ்க்கையில் இல்லாத மாயாவிகளை உருவாக்கியதால் அந்த எதிரிகளை வெல்ல ‘ சூப்பர்பவர் ’ கதாநாயகர்கள் எட்ட முடியாத கற்பனையாக உருவானார்கள். டார்ஜான், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், சக்திமான் போன்ற கதாபாத்திரங்கள் நிஜமில்லை என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ளப் போராட வேண்டியிருந்தது.

தொடக்கத்திலிருந்தே இத்தகைய ஆபத்து, கதைப்பாடல்களில் இடம்பெற்ற உள்ளடக்கத்தில் நிகழவில்லை. நல்ல நாடோடிக் கதைகளும் சிறந்த மனிதர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் கதைப்பாடல்களில் இடம்பெறக் கவிமணி வழிவகுத்தார் என்றே சொல்லலாம்.
‘ஒளவையும் இடைச் சிறுவனும்’ என்ற கதைப்பாடல் சங்க காலப் புலவரான ஒளவையாரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியைச் சொல்வது. ‘புத்தரும் ஏழைச் சிறுவனும்’ என்னும் 
கதைப்பாடல் பிறப்பினால் உயர்வு - தாழ்வுகள் இல்லை என்ற புத்தரின் போதனையை உள்ளடக்கமாக கொண்டது.

கவிமணி போட்ட பாதையிலே முதலில் தமிழ் குழந்தைக் கவிஞர்கள் பயணித்தார்கள் என்றாலும் நாளடைவில் கதைப்பாடல்களில் இடம்பெற்ற உள்ளடக்கத்தின் பரப்பு விரிவடைந்தது.

சங்க இலக்கியக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கதைப்பாடல்கள் எழுதப்பட்டன. புலவர் மோசிகீரனார் முரசு கட்டிலில் தூங்கிய போது சேர மன்னன் இரும்பொறை சாமரம் வீசிய சங்க இலக்கியக் கதையைக் கவிஞர் தமிழழகனும், அரிய கனியை ஒளவைக்கு ஈந்த அதியமானைப் பற்றிக் கவிஞர் சி.மாணிக்கமும் எழுதியதை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

வரலாற்றுச் சம்பவங்களும் கதைப்பாடலின் உள்ளடக்கங்களாயின. கலிங்கப்போர் அசோக மன்னனிடம் ஏற்படுத்திய மனமாற்றத்தைக் கவிஞர் திருச்சி பாரதன் எழுதியது புதுமையான முயற்சியாக இருந்தது.
‘ஆடு + புலி + புல்லுக்கட்டு’ என்ற புதிர்க் கதையை வித்தியாசமான கதைப் பாடலாகத் தந்தார் கவிஞர் லெமன்.

நடப்பியல் கதைகளும் கதைப் பாடலுக்குச் கருவாயின. கவிஞர் புலேந்திரன் எழுதிய ‘பாலனும் வேலனும்’ கதை இரு சிறுவர்களைப் பற்றியது. பெற்றோருக்கு உதவுதல், நட்பின் சிறப்பு போன்ற கருத்துக்களை விளக்கும் நடப்பியல் கதைகளைக் கவிஞர்கள் பலரும் கதைப் பாடலாக்கியுள்ளனர்.

அயல்நாட்டுத் தமிழ்க் கவிஞர்களும் கதைப்பாடல்களைத் தந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் முரசு நெடுமாறன். அவர் எழுதிய ‘பூனையைக் கடித்த எலி ’ நல்ல கற்பனை நயமுடையது. அதே தொனியில் ‘எலி கடித்த பூனை’ என்று நம் மழலைக் கவிஞர் குழ.கதிரேசன் தந்த கதைப்பாடல் குழந்தைகளின் மத்தியில் பிரபலமானது. இக்கதைப் பாடலோடு ‘தொப்பைக்கோழி’ கதைப்பாடலும் ஒலிப்பேழைகளாக வந்தது குறிப்பிடத்தக்கது.

நல்ல நீதிகளைக் கூறுகிற பிற நாட்டுக் கதைகள் கதைப் பாடல்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. அறிஞர் பெ.நா.அப்புஸ்வாமி எழுதிய ‘கோழியும் தோழிகளும்’ இதற்கு நல்ல உதாரணம்.

கோழி ஒன்று குப்பை மேட்டைக் கிளறிய போது அதற்கு நெல்மணி கிடைக்கிறது. அதை விதையாக விதைத்தால் நிறைய விளையும், பலரும் சாப்பிடலாம் என்று கோழி நினைக்கிறது. தன் நண்பர்களான பன்றி, நாய், காக்கை, கிளி, கழுதை, கொக்கு, வாத்து, பூனை, குருவி, மயில் ஆகியோரை அழைக்கிறது. உழுது விதைக்கலாம் என்ற கோழியின் அழைப்பிற்கு யாரும் செவி சாய்க்கவில்லை. கோழி தன் குஞ்சுகளுடன் சேர்ந்து நிலத்தை உழுது விதைக்கிறது.

நெல் விளைந்த பிறகு நெல் குத்த தோழிகளை அழைக்கிறது கோழி. அப்போதும் யாரும் வேலை செய்ய வரவில்லை.

கோழி சோறு சமைத்த பிறகு உண்பதற்குத் தோழிகள் ஓடி வருகிறார்கள். உழைக்காமல் உண்பதற்கு உரிமையில்லை என்று கூறிக் கோழி தோழிகளை விரட்டியடிக்கிறது.

"வேலை என்றால் மாட்டீர்கள்
வெட்கம் கெட்ட தோழியரே!
மேலை நாளில் நடந்ததெல்லாம்
மீண்டும் நினைத்துப்பாருங்கள்!
உண்போம் சோற்றை நாம் என்றே
ஓடி வந்த தோழியரே!
கண்ணின் முன்னால் நில்லாமல்
காலை நீட்டி நடவுங்கள்!"

என்று அந்தக் கதைப்பாட்டு முடிகிறது. உழைப்பின் மேன்மையைக் கூறும் இந்தக் கதை சோவியத் குழந்தை இலக்கியமாகும்.

வெளிநாட்டுக் கதைகளைக் கதைப் பாடல்களாகத் தந்த வரிசையில் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா ஈசாப் கதைப் பாடல்களைத் தனி நூலாகவே தந்தார். ஒவ்வொரு கதைப் பாடலிலும் படமும் இடம் பெற்றது. 1987-இல் இந்நூல் வெளிவந்தது. ஆனால் 1948-லேயே அறிஞர் பெ.நா.அப்புஸ்வாமி அவர்கள் 'சித்திரக் கதைப்பாட்டு' என்ற பெயரில் கதை, பாட்டு, சித்திரமும் சேர்த்துத் தந்தது புதுமையும் பெருமையும் வாய்ந்ததாக இருந்தது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த அற்புதம் தமிழ்-குழந்தை இலக்கியத்தில் அதற்குப் பிறகு நடக்கவில்லை.

இதற்கு இணையான இன்னொரு அற்புதம் 1977-இல் நடந்தது. ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கு நிறைய கதைப் பாடல்கள் வந்துள்ளன. கவிஞர்கள் பலர் எழுதிய பல கதைப் பாடல்கள் (ஷிtஷீக்ஷீஹ் றிஷீமீனீs யீஷீக்ஷீ சிலீவீறீபீக்ஷீமீஸீ ) ஒரே தொகுப்பாகவும் வந்துள்ளன. இதைப் போலத் தமிழில் வெளிவரவில்லையே என்ற குறையை 'சிறுவர் கதைப் பாடல்கள்' என்ற பெயரில் 60 கவிஞர்கள் எழுதிய 60 கதைப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டதன் மூலம் அழ.வள்ளியப்பா தீர்த்து வைத்தார்.
சங்க காலப் புலவர்கள், அரசர்களின் பெருமையை எடுத்துக் காட்டும் பாடல்கள், பெரியோர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டும் பாடல்கள், ஆங்கிலக் கதைகள், பாடல்களைத் தழுவி எழுதப் பெற்ற பாடல்கள், நாடோடிக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் என இத்தொகுப்பு பொக்கிஷமாகவே இருந்தது. பல வகையான உத்திகளில் பல வகையான சந்தங்களில் பல உண்மையை உணர்த்தும். உள்ளத்தைத் தொடும், நல்லதைப் போற்றும், நகைச்சுவை ஊட்டும் கதைப் பாடல்கள் என இத்தொகுப்பு கதைப் பாடல்களின் கதம்பம் எனலாம்.

அது மட்டுமில்லாமல் மிகப்பெரிய தமிழறிஞர்களும் கவிஞர்களும் தயக்கமில்லாமல் குழந்தை இலக்கியம் படைப்பதில் ஈடுபட்டார்கள் என்பதற்கு உதாரணமாக இத்தொகுப்பு திகழ்ந்தது. அறிவியல் அறிஞர்கள் பெ.நா. அப்புஸ்வாமி, பெ.தூரன், பொருளியல் அறிஞர் மா.பா.குருசாமி, நாவலாசிரியர்கள் சூடாமணி, கிருஷ்ணன் நம்பி, கவிஞர்கள் சௌந்தரா கைலாசம், தமிழ் ஒளி, தமிழ்முடி, ஈரோடு தமிழன்பன், மஹி, லெமன், தமிழறிஞர்கள் மயிலை சிவமுத்து, மனசை ப.கீரன், தணிகை உலகநாதன், ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆகியோரே அத்தகைய பெருந்தன்மைமிக்க படைப்பாளிகள். ஏனென்றால் மிகப்பெரிய எழுத்தாளர்களின் பாராமுகம் இன்று வரை தமிழ்குழந்தை இலக்கியத்தளத்தில் நீடிக்கிறது என்பதே உண்மை. அதை மறைக்க வேண்டியதில்லை.

குழந்தைகளுக்கான கதைப் பாடலின் வலிமை 1960-70களில் வானொலி, திரைப்படங்களிலும் எதிரொலிக்கத் தவறவில்லை. வானொலி நிலையங்கள் கதைப் பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்தன. கவிமணி, செல்ல கணபதி, அழ.வள்ளியப்பா, மின்னூர் சீனிவாசன், வெ.நல்லதம்பி ஆகியோரின் கதைப் பாடல்கள் 'வானொலி அண்ணா' நடத்திய சிறுவர் நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன.

திரைப்படங்கள் கதைப் பாடல்களைப் பயன் படுத்தியதால் அவ்வடிவம் குழந்தைகளுக்கு விருப்பமான ஒன்றானது. களத்தூர் கண்ணம்மாவில் வந்த சிங்கமும் முயலும் கதைப் பாடல் சிறுவர்களை மிகவும் கவர்ந்தது. 'பாப்பா பாப்பா, கதை கேளு, காக்கா நரியின் கதை கேளு, அப்பா அம்மா கேட்ட கதை, தாத்தா பாட்டி சொன்ன கதை' என்ற 'கண்ணே பாப்பா' திரைப்படத்தில் இடம் பெற்ற கதைப் பாடல் பள்ளிக் குழந்தைகளைப் பாட வைத்தது. 'நீலச்சாயம் வெளுத்துப் போச்சு, நரியின் வேஷம் கலைஞ்சிப் போச்சு'. 'ராஜா சின்ன ரோஜாவோடு வேட்டைக்கு வந்தாராம்' போன்ற கதைப் பாடல்கள் சமீபத்திய திரைப்படங்களில் இடம் பெற்றன.

கதைப் பாடல்கள் என்றாலே விலங்குகள், பறவைகள் பாத்திரங்களாக இடம்பெறும் நாடோடிக் கதைகளை, பஞ்ச தந்திரக் கதைகளைச் சொல்வது என்பது பெரும் போக்காக இருந்த நிலையில் சிறுவர் சிறுமிகளைப் பாத்திரங்களாகக் கொண்ட நடப்பியல் கதைகளையும் சான்றோர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் கதைப்பாடலில் எழுதிய பெருமை குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவைச் சேரும்.

அழ.வள்ளியப்பாவின் 'மலரும் உள்ளம்' நூலில் உள்ள 'அழியாச் செல்வம்' என்ற கதைப் பாடல் மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவத்தைப் படம் பிடித்துக் காட்டியது.

'வாழ்க்கைக்குப் பொருள் அவசியம்தான்; பொருள் மட்டுமே வாழ்க்கையாகி விடாது'. உண்மையில் அழியாச் செல்வம் எது என்பதைச் செல்லம்மாவுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் புரிய வைக்கும் கதைப் பாடல் இதோ  அழியாச் செல்வம்

எட்டய புரத்து மன்னருடன்
இனிதாய்க் காலம் கழித்திடவே
பட்டணம் சென்றனர் பாரதியார்.
பலநாள் சென்று திரும்பினரே.
வாசலில் குதிரை வண்டியுமே
வந்து நின்றதைக் கண்டதுமே,
ஆசையாய் வாசலை நோக்கி வந்தார்
அவரது மனைவி செல்லம்மா.

வண்டியை விட்டே பாரதியார்
மகிழ்வுடன் கீழே இறங்கி வந்தார்
வண்டியிலிருந்த பொட்டணங்கள்
வந்தன பாரதி பின் தொடர்ந்தே!
பட்டுப் புடவை, பாத்திரங்கள்,
பற்பல நல்ல பொருள்களுமே
பொட்டணத்துள்ளே இருக்குமெனப்
பிரித்துமே பார்த்தனர் செல்லம்மா.

பட்டுப் புடவையும், அங்கு இல்லை;
பாத்திர பண்டமும் அங்கு இல்லை;
பொட்டணத்துள்ளே இருந்ததெல்லாம்
புத்தகம், புத்தகம், புத்தகமே!

அரசர் கொடுத்தது ஐந்து நூறு,
அத்தொகை யாவுமே புத்தமாய்
இருப்பதறிந்ததும் 'ஐயையோ,
ஏனோ இப்பிடிச் செய்து விட்டீர்!

எனக்குப் பிடித்ததாய் ஏதுமில்லை,
இப்படிக் காசைக் கெடுப்பதுவோ?
சினத்துடன் மனைவி பேசிடவே
சிரித்துமே பாரதி கூறினரே;

பட்டுப் புடவை, வெள்ளியிலே
பாத்திரம், பண்டங்கள் வாங்காமல்
பட்டணம் சென்றே வீணாகப்
பணத்தைக் கெடுத்ததாய் எண்ணுகிறாய்

அழிகின்ற செல்வம் நான் கொடுத்தே
அழியாத செல்வம் கொண்டு வந்தேன்
அழகழகான கருத்தையெல்லாம்
ஆனந்தமாய் படித்தறிவோம்,"

இதே போல் மகாகவி பாரதி போன்ற பெருமை மிகு பெரியோரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கதைப் பாடல்களாகக் கவிஞர் வெற்றிச் செழியன் தற்போது எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.

சோவியத் ரஷ்யா பள்ளிக்கு அயல்நாட்டுக் கல்வியாளர் ஒருவர் வந்திருந்தார். அவர் அப்பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடிய போது மாணவர் ஒருவரின் கணித அறிவைச் சோதித்தறியும் நோக்கில் ஒரு கேள்வி கேட்டார். ஒரு பொருளை ரூ.100/-க்கு வாங்கி ரூ.150/-க்கு விற்றால் என்ன லாபம் கிடைக்கும்? என்பது கேள்வி. கேள்விக்கு அம்மாணவன் 'ஜெயில் கிடைக்கும்' என்று பதிலளித்தது திடுக்கிட வைத்தது. மாணவனின் பதிலுக்குக் காரணம் புதிய சமூக மதிப்பீடுகள். சோவியத் ரஷ்யா குழந்தை இலக்கியம் புதிய மதிப்பீடுகளை முன் வைத்தது. அப்புதிய மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட ரஷ்யச் சிறுவர் கதைகளைத் தழுவிய கதைப் பாடல்களைக் கவிஞர் தண்டரை முகில் வண்ணன் 'புதுமழை' என்ற நூலில் வழங்கியுள்ளார். உண்மையில் இந்நூல் புதுமழைதான். 1991-இல் என்.சி.பி.எச். புத்தக நிறுவனம் இப்புது மழையைப் பொழிய வைத்தது.

அந்நூலில் 'தாய் அன்பு' என்ற கதைப்பாடல் சோவியத் குழந்தைக் கதையைத் தழுவி எழுதப் பட்டுள்ளது.

"தந்தந் தந்தத் தன தனனா.....
தாயின் அன்புக் கொரு கதை கேள்!

கோழி ஒன்று முட்டையிட்டுக்
குஞ்சுகள் பத்து பொரித்ததுவாம்
பூப் போல் அந்தக் குஞ்சுகளைப்
போற்றிக் காத்து வளர்த்ததுவாம்.

பாசத்தோடு உணவினையும்
பகிர்ந்து சமமாய் அளித்ததுவாம்
புசித்தால் சமமாய்ப் புசித்திருக்கும்
பசித்தால் சமமாய்ப் பசித்திருக்கும்.

இப்படி வாழ்வை வகுத்தனவாம்
எல்லாம் வளர்ந்து பருத்தனவாம்
ஒருநாள் நண்பகல் வேளை வரை
உணவே யார்க்கும் கிடைக்கவில்லை.

பசியால் எல்லாம் துடித்தனவாம்
பத்தும் கண்ணீர் வடித்தனவாம்!
தத்தம் போக்கில் தரை கிளறித்
தம் பசிக் குணவைத் தேடினவாம்!

அவற்றுள் ஒன்றின் முயற்சியினால்
அரை முழ மண்புழு கிடைத்ததுவாம்
தான் கண்டெடுத்த உணவதனைத்
தனியே உண்ண முனைந்ததுவாம்.

ஒன்பது குஞ்சுகள் பசித்திருக்க
ஒன்று மட்டும் புசித்திருக்கப்
பார்த்து தாயும் சினந்ததுவாம்
பறந்து குஞ்சிடம் விரைந்ததுவாம்.

கூர் அலகால் அதைக் கொத்தியதாம்
குஞ்சின் உணவைப் பற்றியதாம்
பத்தாய்ப் புழுவைப் பகிர்ந்ததுவாம்.
பத்துக்கும் உண்ணக் கொடுத்ததுவாம்.

உழைப்பதைச் சமமாய் உழையுங்கள்
உண்பதைச் சமமாய் உண்ணுங்கள்
பலரும் பட்டினி கிடக்கையிலே
சிலரே உண்பதை ஒழியுங்கள்.

என்றே தாயும் சொன்னதுவாம்
எல்லாம் ஒப்புக் கொண்டனவாம்!
தாயின் இந்த அறிவுரைகள்
தவறா சொல்வீர் தம்பிகளே!"

'எல்லோரும் சமமே' என்பதை இக் கதைப் பாடல் குழந்தைகளுக்குப் புரிய வைத்துவிடும். இத்தகைய புதிய விழுமியங்களை உள்ளடக்கமாகக் கொண்ட கதைப் பாடல்களே இன்றைய தேவை. இப்போது குழந்தைக் கவிஞர்கள் கதைப் பாடல்கள் எழுதுவது குறைந்து விட்டது. சிறுவர் இதழ்களும் பதிப்பகங்களும் பாடப்புத்தகங்களும் கதைப்பாடல்களை அதிகமாக வெளியிட முன் வர வேண்டும். அப்போது கதைப்பாடலுக்கான முன்பிருந்த 'பொற்காலம்' மீண்டும் மலரும்.

சுகுமாரன்

கற்பித்தலில் குழந்தை இலக்கியம்

"வருடம் தவறாமல்
குழந்தைகள் தினத்தைக்
கொண்டாடுகிறவர்களே,
தினங்கள் கொண்டாடுவதை
விட்டு விட்டு
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகின்றீர்கள்?"

கவிக்கோ அப்துல் ரகுமானின் இக் கவிதை வரிகள் குழந்தைகள் தொடர்பாக பல கேள்விகளை நம் முன் வைக்கிறது. அக்கேள்விகளில் ஒன்று, பள்ளியில் படிப்பு குழந்தைகளுக்கு விருப்பமான ஒன்றாக இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் படிப்பை விருப்பமான ஒன்றாக மாற்ற என்ன செய்வது? இதற்கு பதில் ஒன்றும் தெரியாத ஒன்றல்ல! குழந்தைகள் ஆடல், பாடல், கதை யாடலை விரும்புகிறார்கள். அவற்றை இணைத்து அவற்றின் வழியாக படிப்பு நடந்தால் அது அவர்களுக்கு இனிப்பாக மாறிவிடும்.

குழந்தையின் முதல் ஆசிரியையான அம்மா தன் செல்லக் குழந்தை மழலை பேசத் தொடங்கியதும் 'கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு' என்றும் 'சாய்ந்தடம்மா சாய்ந்தாடு, சாயக்கிளியே சாய்ந்தாடு' என்றும் பாடுவதற்கு பழக்குகிறாள். தாலாட்டு பாடல்கள் கேட்டு வளர்ந்த குழந்தைக்கு படிப்பின் துவக்கம் பாடல்களாக இருப்பதே பொருத்தமாக இருக்கிறது. அதனால் கற்பித்தலின் முதல் படியாக ஆயத்தப் பாடல்கள் (motivation)  முக்கியத்துவம் பெறுகிறது
.
குழந்தைகள் முன் பருவக் கல்வி பெறுவதற்காக நர்சரி, கான்வென்ட் போன்ற ஆங்கில வழி பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். 'தோ, தோ, நாய்க்குட்டி, துள்ளி வா, வா, நாய்க்குட்டி' என்று பொருள் புரியும் பாட்டை தாய் மொழியில் பாடிய குழந்தைகளுக்கு 'நர்சரி ரைம்ஸ்' என்ற பெயரில் 'டுவிங்கிள், டுவிங்கிள், லிட்டில் ஸ்டார்' பாடலும் 'ரெய்ன் ரெய்ன் கோ அவே' பாடலும் தருவது குழந்தைகளை ஆயத்தப் படுத்த உதவுமா என்பது புரியவில்லை. இதில் மேலும் ஒரு அபத்தம் என்னவென்றால் மழை தேவைப்படும் தமிழ்நாட்டில் 'மழையே மழையே போ போ' என்று குழந்தைகள் பாடுவதுதான்.

துவக்க நிலையில் குழந்தைகள் நிறைய பாடல்களைக் கேட்பதும் பாடுவதும் அவர்களின் மொழித் திறன்களை வளர்க்க உதவுகிறது. ஆங்கில மொழியோடு ஒப்பிடும் போது மழலைப் பாடல்கள் தமிழில் அதிகமில்லை. 1980-களில் வெளி வந்த புலவர் இளஞ்செழியன் எழுதிய 'மழலை மத்தளம்' நூல் சிறப்பான மழலைப் பாடல்களைக் கொண்டது. இதற்கு இணையான நூல் இன்னும் வெளிவர வில்லை. அகர முதலியைக் கற்றுக் கொடுப் பதற்காகவோ, பாடப் பொருளை விளக்குவதற்காகவோ இவரது மழலைப் பாடல்கள் எழுதப்படவில்லை. ஓசை நயத்தோடு குழந்தை உலகத்தோடு நெருக்கமான காக்கா, மயில் பற்றிய எளிய பாடல்கள் இவை,

"மயில் ஒன்று ஆடுது
மந்தி எல்லாம் கூடுது!
குயில் ஒன்று பாடுது
குருவி எல்லாம் கூடுது!
மயிலைப் பார்த்து
குயிலைப் பார்த்து
மந்தி தலையை ஆட்டுது!  

என்ற பாடலைக் கேட்டு தலையை ஆட்டாத குழந்தைகள் இருக்க முடியாது. விரல் விட்டு எண்ணத் தக்க நிலையிலே மழலைப் பாடல்களை தந்துள்ள கவிஞர்களுக்கு மத்தியில் மழலைக் கவிஞர் என்று புகழ்ப் பெற்றுள்ள குழ.கதிரேசன் அவர்கள் மழலைப் பாடல்கள் அதிகம் எழுதியுள்ளவர். அவருடைய மழலைத் தேன், மழலை அரும்பு, மழலை கரும்பு போன்ற நூல்கள் பாடநூல்கள் போல் காட்சியளிக்கின்றன. 'இளந்தளிர்' என்ற தலைப்பில் கவிஞர். ச.வெற்றிச்செழியன் தொகுத்துள்ள நூலில் மழலைப் பாடல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆக, தமிழில் மழலைப் பாடல்கள் போதிய அளவிலும் வளமாகவும் வரவில்லை என்பது வருந்தத் தக்க உண்மையாகவே இன்னும் இருக்கிறது.
குழந்தைகளுக்கான மழலைப் பாடல்கள் கற்பித்தலை கொண்டாட்டமாக மாற்ற உதவ வேண்டும். அப்படியென்றால் அப்பாடல்கள் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருக்க வேண்டும். அதில் நீதிப் போதனைக்கு இடமில்லை, பாடப் போதனைக்கும் முக்கியத்துவமில்லை.
உதாரணமாக சில பாடல்கள்:

"திமுக்குத் தக்கா திமுக்குத் தக்கா
திமுக்குத் தக்காடி
சின்னப் பாட்டி தோட்டத்திலே
சிவப்புத் தக்காளி"
"டக் டக் கடிகாரம்
தட்டு நிறைய பணியாரம்
குட்டி குட்டி சுண்டொலி
எட்டி எட்டிப் பார்க்குதாம்"

மழலைப் பாடல்கள் குழந்தைகளைப் பரவசப் படுத்துகிறது. பக்தி பரவச நிலையில் பக்தர்கள் கடவுளோடு ஐக்கியமாகி விடுவது போல் குழந்தைகள் கற்றலுக்கு தயாராகி விடுகிறார்கள்.

முன் பருவக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கற்பித்தலில் விடுகதைகளும் குட்டிக் கதைகளும் குழந்தைகளின் கேட்டல் மற்றும் பேசுதல் திறன்களை வளர்க்க உதவுகிறது. கற்பித்தலை கற்கண்டாக மாற்றுவது இவைகள் தான்: தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், அக்காவிடம் கதைகள் கேட்டு கேட்டு ஆர்வமும் ரசனையும் பெற்றுள்ள குழந்தைகளுக்கு மேலும் அவர்களின் அகவுலகை பள்ளிகளில் கேட்கும் கதைகள் விரிவுப் படுத்துகின்றன. விரிவுப் படுத்த வேண்டும் அவ்வாறு இல்லாமல் நமது தொடக்கப் பள்ளி பாடநூல்களில் கதைகள் பாடங்களாக காட்சியளிக்கின்றன, சேர்த்து எழுதுக, பிரித்து எழுதுக, கோடிட்ட இடத்தை நிரப்புக, எதிர்ச் சொல் எழுதுக, வினாக்களுக்கு விடை எழுதுக என்று மொழிப் பயிற்சிகளுக்குரிய களன்களாக காட்சியளிக்கின்றன. கதையின் மையக் கருத்தை உணருவதற்கு கூட பயிற்சிகள் இல்லை.

கதை கேட்கும் அல்லது படிக்கும் குழந்தை அக்கதையில் வரும் பாத்திரங்களோடோ, நிகழ்வுகளோடோ தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் குழந்தைக்கு கற்பனையும் சிந்தனையும் வளர அக்கதை உதவக்கூடும். அவ்வாறில்லாமல் தேர்வில் மதிப்பெண்கள் பெறும் நோக்கில் படித்தால் மனப்பாடம் தான் விரியும் : மனவுலகம் விரியாது.

பள்ளி பாடங்களில் இடம் பெறும் கதைகளில் இறுதியாக கேட்கப்படும் கேள்வி "இக்கதையிலிருந்து நீ தெரிந்துக் கொண்ட நீதி என்ன?" என்பதாக இருக்கிறது. ஒரு கதையில் ஏதாவது நீதி இருக்கிறதா, இல்லையா என்பது குழந்தைகளுக்கு முக்கியமில்லை. அவர்களைப் பொறுத்த வரை கதையே முக்கியம். இந்த கதை இந்த நீதியைத் தான் கூறுகிறது என்று சொல்லி முடித்து விட்ட பிறகு அக்கதையை மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பதற்கு குழந்தைக்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது, உதாரணத்திற்கு காகமும் நரியும் கதையை எடுத்துக் கொள்ளுவோம். அக்கதை எவ்வாறொல்லாம் உருமாற்றம் செய்யப்பட்டு இன்று சொல்லப்படுகிறது. அக்கதையில் ஒரு முறை காகம் ஏமாறுகிறது. இன்னொரு முறை நரி ஏமாறுகிறது. இப்படி கதைகளை நீட்டியும் சுருக்கியும் மாற்றியமைத்தும் பாத்திரங்களின் குணநலன்களை மாற்றியும் தன் சொந்த கதைகளாக மாற்றிக் கொள்ளும் சுதந்தரத்தை பள்ளி பாடப் புத்தகக் கதைகள் குழந்தைகளுக்கு வழங்கவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏனென்றால் இலக்கியம் தனித்த அனுபவங்களைத் தருவது. கற்பித்தலில் பயன்படுத்தப்படும் போதும் அதன் பண்புகள் காக்கப்பட வேண்டும்.
(Literature is more experienced than taught. Allow children to feel free read against a text - Prof. Krishna Kumar)

குழந்தைகள் தானாக விரும்பி கற்கும் வகையில் பாடங்களை ஆக்குவது குழந்தை இலக்கியந்தான். குழந்தை இலக்கியத்தை பாடங்களாக மாற்றி கற்பிக்கும் போது நேருவது என்ன? வெறும் யந்திரத்தனம், யந்திரத்தனம், யந்திரத்தனம்.

இரண்டாம் வகுப்பு தமிழ் பாட நூலில் உள்ள யார்? யார்? யார்? என்ற அழ. வள்ளி யப்பாவின் பாடல் எப்படி கற்பிக்கப்படுகிறது? அப்பாடல் பகுதியில் இடம் பெற்றுள்ள பயிற்சிகளைக் கொண்டே அதை அளவிட்டு விடலாம்.

காற்று என்னவெல்லாம் செய்தது? என்ற வினா கேட்கப்படுகிறது. சட்டையைத் தூக்கிக் கீழே போட்டது, தாள்களை அங்கும் இங்கும் இறைத்தது, சன்னல் கதவை சாத்தியது, மரங்களை அசைத்தது என்று உயிரோட்டமில்லாத பதில்கள் படிக்கப்படுகிறது. ஆனால் அப்பாடல் உணர்ச்சிகளை எழுப்பவல்லது.

தொங்க போட்ட சட்டையைத்
தூக்கிக் கீழே போட்டவன் யார்? என்று
படிக்கும் போது குழந்தைக்கு குழப்ப உணர்ச்சி எழுகிறது.
எழுதி வைத்த தாள்களை
இங்கும் அங்கும் இறைத்தவன் யார்? என
படிக்கும் போது குழந்தைக்கு கோப உணர்ச்சி தோன்றுகிறது.
சன்னல் கதவைப் பட்டெனச்
சாத்தி விட்டுச் சென்றவன் யார்? என
படிக்கும் போது திகைப்பு உணர்ச்சி ஏற்படுகிறது.
அருகில் நிற்கும் மரங்களை
அசைத்தே ஆடச் செய்தவன் யார்?

என படிக்கும் போது பிரமிப்பு குழந்தைகளின் உள்ளத்தில் தொற்றுகிறது. யார்? யார்? என்ற கேள்விகளின் விடையாக இயற்கை சக்தியான காற்றின் வல்லமையை குழந்தை உணர்ச்சிகளின் வழியே அறிந்துக் கொள்கிறது. இவ்வாறு இந்த பாடல் எழுப்பும் உணர்ச்சிகள் எதையும் தராமல் அகர முதலி அறிவது, எதிர்ச்சொல் அறிவது என்று இப்பாடலை கற்பிப்பது குழந்தை இலக்கியத்தை உயிரோட்டம் இல்லாமல் செய்து விடுகிறது.
கற்பித்தலில் குழந்தை இலக்கியத்தை யந்திரத்தனமாக பயன் படுத்துவதால் அதை உயிரோட்டமில்லாமல் செய்து விடுவது ஒரு புறமிருக்க, பாடப் பொருளை விளக்குவதற்காக யந்திரத்தனமாக குழந்தை இலக்கியத்தை உருவாக்குவதும் உயிரோட்டமில்லாமல் செய்து விடுகிறது.
மொழிப் பாடத்தை கற்பிக்க குழந்தை இலக்கியம் நிறையவே உள்ளது. கணிதம், அறிவியல், வரலாறு போன்ற பாடங்களைக் கற்பிக்க போதுமான அளவில் பாடல்கள், கதைகள் இல்லாத நிலையில் பாடப் பொருளை விளக்குவதற்காக அவை உருவாக்கப்படுகிறது. அவ்வாறு உருவாக்கப்படும் பொழுது அவை வறட்டுத் தனமாக இல்லாமல் உயிரோட்டம் உள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
கணிதத்தில்,

'ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தில் கண் இரண்டு
மூன்று முக்காலிக்கு கால் மூன்று' என்ற  பாடலும்
'ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது,
இரண்டு குடம் தண்ணி ஊத்தி இரண்டு பூ பூத்தது'

என்ற பாடலும் குழந்தைகளுக்கு எண்களை சிறப்பாக கற்பிக்க உதவுகின்றன.

அறிவியலில் 'திசைகள்' பற்றிய இந்த பாடல் மிகவும் ஆற்றலுள்ளது.
'சூரியன் உதிப்பது கிழக்கு
அதன் எதிர்புறம் இருப்பது மேற்கு
நின்று கையைத் தூக்கு
வலக்கைப் பக்கம் தெற்கு
இடக்கைப் பக்கம் வடக்கு
போதும் கையை மடக்கு'
இது போலலே உடல் உறுப்புகள், உடல் நலம், நீர் நிலைகள் பற்றி கற்பதற்கும் குழந்தைக் கவிஞர்கள் பற்பல பாடல்களை எழுதியுள்ளதை நாமறிவோம்.

சமூகவியலில் தலைவர்கள், வரலாற்று நிகழ்ச்சிகள் ஆகியவற்றை கதைகளாகவும் பாடல்களாகவும் நாடகங்களாகவும் கற்பிக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது.
சமூகவியல் பாடங்கள் ஒவ்வொன்றையும் சிறு சிறு நாடகங்களாக ஆக்கி விட முடியும். நாடகம் மிகச் சிறந்த கற்பித்தல் உத்தி, வகுப்பறையை நாடக மேடையாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நாடகம் குழந்தைகளின் பேச்சுத் திறனை வளர்க்கிறது. பாடப் பொருளை ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்ள உதவுகிறது. முழு வகுப்புமே பங்கெடுத்துக் கொள்ளும் கற்றல் செயலாக பரிணமிக்கிறது. ஓரிரண்டு காட்சிகள் கொண்ட நாடகங்கள் குழந்தைகள் படிக்கவும் நடிக்கவும் துணை செய்ய வல்லது. ஆயினும் பாடப்புத்தங்களில் இடம் பெறும் நாடகங்கள் தேர்வு, மதிப்பெண் என்கிற அணுகு முறையை அதிகம் கொண்டுள்ளது. இது குழந்தையின் இயல்புக்கு மாறானது. குழந்தைகள் எல்லா நேரங்களிலும் நாடகத்தின் உத்திகளை அதாவது வேறொருவர் போலப் பேசுதல், மிகைப் படுத்திக் கூறுதல், அபிநயத்தல், நடித்தல் போன்றவற்றை செய்துக் கொண்டு இருக்கின்றனர். ஆகவே குழந்தைகள் சொந்தமாக பேசி நடித்து விட்டால் அவர்களின் ஆளுமைத்திறனுக்கு வேறென்ன சான்று வேண்டும்? நாடகங்களை தேர்வுக்குரிய பாடங்களாக ஏன் மாற்ற வேண்டும்?
இன்று தொடக்கப் பள்ளிகளில் 'சர்வ சிக்ஷா அபியான்'( ஷி.ஷி.கி ) அறிமுகப் படுத்தியுள்ள கற்றல் அட்டைகளில் பாடப் பொருளைக் கற்க கதைகள், பாடல்கள், நாடங்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. இது வரவேற்கத் தக்கது. கற்பித்தலில் குழந்தை இலக்கியத்தின் வலுவான பங்கை இது வலியுறுத்துகிறது எனலாம்.
முறை சாரா கல்வி, வயது வந்தோர் கல்வி, அறிவொளி இயக்கம் போன்ற கல்வித் துறை திட்டங்களில் கற்பிக்கும் உத்திகளாக கதை, பாடல்களே அதிகம் பயன் படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். அறிவொளி இயக்கத்தில் படிக்கும் பெரியவர்களின் மூலம் கிராமப் புறங்களில் வழங்கும் நாட்டுப் புறக் கதைகள், சொலவடைகள், பழமொழிகள் அதிகம் சேகரிக்கப்பட்ள்ளது சிறப்பான விஷயமாகும். இம் முயற்சிகள் அவர்களை இலக்கியத்தின் பால் ஈர்த்துள்ளதைக் காண முடிகிறது.
நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளிகளில் குழந்தை இலக்கிய கதைகள் துணைப் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கிய கதைகள் எனும் ஆறு வழியாக வாசிப்பு கடலை சென்றடைய, இவை குழந்தைகளுக்கு உதவியிருக்க வேண்டும். பலர் கடலில் சேராமல் கரையதுங்கி விட்டார்கள். காரணமென்ன? பரந்த வாசிப்புக்கு வழிகாட்ட வேண்டிய துணைப் பாட நூல்களில் கூட தேர்வுக்குரிய மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயத்தை வைத்திருக்கிறோம். அதனால் துணைப் பாட நூல்களை படிக்காமலே கோனார் உரையை படித்து தமிழ் இரண்டாம் தாளில் அதிக மதிப்பெண் பெற குழந்தைகள் முயல்கிறார்கள். படிக்கும் ஆர்வத்திற்கு துணை செய்ய வேண்டிய துணைப் பாட நூல் துணை செய்யாமலே போய் விடுகிறது. இன்னும் இன்னும் நூல்களைத் தேடி படிப்பதற்கு குழந்தைகளுக்கு உறுதுணை செய்யும் விதமாக துணைப் பாட கதைகளும் நூல் கற்பித்தலும் அமைய வேண்டும்.
கற்பித்தலில் குழந்தை இலக்கியம் சிறப்பாக பயன்பட ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பாடங்களில் இடம் பெறும் குழந்தை இலக்கியத்தை உயிரோட்டம் உள்ளதாக கற்பித்திட அவர்களால் முடியும். பாடநூல்களில் உள்ள பாடல்களை, கதைகளை பாடவும் படிக்கவும் அவர்கள் தான் வழிகாட்ட வேண்டியுள்ளது. இந்நிலையில் அவர்கள் வெறும் ஆசிரியர்களாக இல்லாமல் படைப் பாசிரியர்களாகவும் மாற வேண்டியுள்ளது.
குழந்தை இலக்கியத்தை பயன்படுத்தியும் உருவாக்கியும் கற்பித்தலை குழந்தைகளுக்ளுக் கொண்டாட்டமாக மாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆசிரியருக்கு முதன்மையாக இருக்கிறது. தனக்கு வாசிப்பின் மீது ருசியை ஏற்படுத்தியது ஆசிரியர்கள் தான் என்று நாவலாசிரியர் பென்னீலன் அடிக்கடி சொல்லுவார். தேவைப்பட்டால் ஆசிரியர் கோமாளியாகக் கூட மாற வேண்டுமென்று நவீன குழந்தை நாடகாசிரியர் வேலு சரவணன் குறிப்பிடுவார். ஒரு ஆசிரியர் குழந்தைகளின் மனதில் கதை சொல்லியாக, பாடகராக, நடிகனாக, நடனக் காரனாக இடம் பிடித்து விட்டால் அதுவே நல்லாசிரியருக்கான தகுதியாகும். அத்தகைய ஆசிரியர்களே கற்பித்தலில் குழந்தை இலக்கியத்தை கொண்டாட்டமாக மாற்றுவார்கள், மாற்ற வேண்டும்.  
 -சுகுமாரன்

Monday 25 March 2013

குழந்தை இலக்கியத்திற்கு குறிக்கோள்கள் உண்டா? - சுகுமாரன்


தமிழ் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சிக்கு காரணமென்ன? என்ற என் கட்டுரையைப் படித்து விட்டு நண்பர் லூர்து எஸ்.ராஜ் எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். லூர்து எஸ்.ராஜ் சிறுவர் இலக்கியப் பணியில் தன்னை மனப்பூர்வமாக ஈடுபடுத்திக் கொண்டவர். 50-க்கும் மேற்பட்ட குழந்தை இலக்கிய நூல்களை எழுதியுள்ளவர்.
கீழே இருப்பது அவருடைய கடித வரிகளாகும் :
  " தமிழ் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சியைப் போக்க சமூக அக்கறையுடன் எழுதுகின்ற எழுத்துக்களே தேவை என்று எழுதியிருந்தீர்கள். சமூக அக்கறையில்லாமல் யார் எழுதுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? எல்லாரும் சமூக அக்கறையுடன் தான் எழுதுகின்றனர். ஆனால் பெற்றோரும் கல்வித்துறையும் அதைப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்று நான் நினைக்கிறேன். அதனால் தான் 300 கோடி 400 கோடி இலஞ்சம் எல்லாம் சர்வ சாதாரணமாக கைமாறுகிறது. பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம் என எல்லா துறைகளிலும் திறமைக்கு இடமில்லை. இதுதான் இன்றைய நிலை. தனிநபர் ஒழுக்கம் முக்கியத்துவம் பெறவில்லை. பாலியல் வன்முறைகள் நாடெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அரசியல் அசிங்கமாகி வருகிறது. இத்தனைக்கும் காரணம் தனி மனித ஒழுக்கமின்மையே. எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்கிறேன். பேராசை பெருநஷ்டம் என்பதை சிறுவயதில் நாம் எத்தனைக் கதைகளில் படித்தோம். இப்போது அது எங்காவது எப்போதாவது போதிக்கப்படுகிறதா ? அன்பு, பாசம், தியாகம், ஒழுக்கம், பொதுநலம், துணிவு, தீமையை எதிர்த்துப் போராடுதல் என்பன எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று ஏன் ? தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள். "
நானும் சிந்தித்துப் பார்த்தேன். நண்பரின் கடிதம் குழந்தை இலக்கியத்தின் குறிக்கோள்கள் பற்றி பேசுவதாகப் பட்டது. குழந்தை இலக்கியம் நல்ல போதனைகளுடன் இருக்க வேண்டும் என்று நண்பர் கூறுகிறார். இதைத்தான் டாக்டர் பூவண்ணன் " இன்றைய சிறுவரை நாளைய சிறந்த குடிமக்களாக மாற்றும் அற்புத ஆற்றல் பெற்றது சிறுவர் இலக்கியம் " என்று குழந்தை இலக்கியத்தின் குறிக்கோளை கோடிட்டு காட்டியுள்ளார்.
' இன்று குழந்தைகள் நீங்கள் - எனினும்
இனி இந்த நாட்டினை ஆளப் பிறந்தீர் ' என்று பாவேந்தர் பாரதிதாசனும்,
" ஏடு தூக்கிப் பள்ளியில்

இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார் " என்று அழ. வள்ளியப்பாவும்
" நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
நாடே இருக்குது தம்பி " என்று கவிஞர் வாலியும்
இந்த நோக்கத்தைத்தான் வலியுறுத்துகின்றனர். குழந்தைகளை நல்ல குடிமக்களாக உருவாக்கும் குறிக்கோள் குழந்தை இலக்கியத்திற்கு இருக்கிறது என்பதே எல்லோரும் சொல்ல வருகிறார்கள். அதனால் கவிமணி காலந்தொட்டு குழந்தைகளுக்கு ஒழுக்கம், குடிமைப்பண்புகள் பற்றிய பாடல்களை இயற்றியுள்ளார்.
முதலாவதாக உள்ள ஒழுக்கம் கடவுள் நம்பிக்கை !.
' கள்ள வழியினிற் செல்பவரை - எமன்
காலடி பற்றி தொடர்வானடா !
உள்ள படியே நடப்பவர்க்குத் - தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா ! '
இவ்வாறு 'தெய்வம் துணை’ என்று கவிமணியைத் தொடர்ந்து மகாகவி பாரதியும்,
‘ தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்கு வரமாட்டாது பாப்பா ’ என்கிறார்
‘ எல்லாம் அறிந்த கணபதியே
எவ்வரம் கேட்பேன், தெரியாதா ?
நல்லவன் என்னும் ஒரு பெயரை
நான் பெற நீ வரம் தா தா தா .....
என்று குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவும் கடவுள் நம்பிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
குழந்தை இலக்கிய இதழ்களில் முதலாவது தோன்றிய பாலியர் நேசன், கிறித்துவ மத நம்பிக்கையை குழந்தைகளிடம் போதிக்க வெளியிடப்பட்டது. நூறாண்டுகளுக்கும் மேலாக தமிழில் கிறிஸ்துவ மத நம்பிக்கையை வலியுறுத்தும் குழந்தை இலக்கிய நூல்கள் ஏராளம் வந்துள்ளன.
1817 ஆம் ஆண்டிலேயே இஸ்லாமிய பள்ளிகளை ஏற்படுத்தி குழந்தைகளுக்காக அல்லாவை போற்றி பாடும் பாடல்களை எழுதிய செய்யது முகம்மதுவின் புகழ் பெற்ற பாடல் இது :
' ஹஸ்பீ ரப்பீ ஜல்லல் லாஹ்
மாஃபீ கல்வீ கைருல்லாஹ்
நூரு முகம்மது சல்லல்லாஹ் - ஹக்
லா யிலாஹ இல்லல் லாஹ் ’
‘பைபிள் கிறிஸ்தவர்களைத் தான் உருவாக்கியது. குரான் இஸ்லாமியர்களைத் தான் உருவாக்கியது. பகவத் கீதை இந்துக்களைத் தான் உருவாக்கியது. அவைகள் மனிதர்களை உருவாக்கவில்லை என்ற ஒரு விமர்சனத்தை அறிந்திருந்த காரணத்தால்தான் என்னமோ மழலைக்கவிஞர் குழ.கதிரேசன் மதச்சார்பற்ற நிலையில் நின்று தனது குழந்தை இலக்கியக் கோட்பாடு பற்றிய பாடலில்,
' இறைக்கோர் வடிவம் தந்தாலே
எல்லாக் குழந்தைக்கும் போகாது !
தனிமைக் கூண்டில் அடைப்பட்டுக்
தங்க கவிதை இருந்து விடும் ! ’ என்று
இறைக்கோர் வடிவம் குழந்தைப் பாடல்களுக்குத் தேவையில்லை என்று கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் கடவுள் நம்பிக்கைக்கு எதிரான நிலையை பாவேந்தர் பாரதிதாசனிடமும் பட்டுக்கோட்டையிடமும் பார்க்க முடிகிறது.
'தெய்வம் தொழ வேண்டா - அது
தீது செய்யத் தூண்டும் ' என்று
இளைஞர் இலக்கியத்தில் கூறுகின்றார் பாரதிதாசன்
‘ தனியுடைமை கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா - தானாய்
எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா ’
என்று பட்டுக்கோட்டையின் பாடல் ‘தெய்வம் துணை’ என்பது பழைய பொய் என்று சூசகமாக குறிப்பிடுகிறது.
ஆம்! கடவுள் நம்பிக்கை அல்லது மறுப்பு பற்றிய சிக்கல் குழந்தை இலக்கியத்திலும் இருப்பதை அறிய முடிகிறது. எதை பின்பற்றுவது என்ற குழப்பம் குழந்தை இலக்கிய படைப்பாளிகளிடம் தோன்றாமல் இல்லை.
குழந்தை இலக்கியம் குழந்தைகளின் முகத்தையும், அகத்தையும் பிரதிபலிக்க வேண்டுமென்று மழலைக் கவிஞர் கூறுகிறார். கடவுள் நம்பிக்கை என்பது குழந்தைகளின் மன இயல்புக்கு ஏற்றதா ? என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
‘கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் ’ என்கிறது பைபிள்.கடவுள் பயத்தை ஊட்டி வளர்ப்பதால் குழந்தைகளிடம் மனப் போராட்டங்களே ஏற்படுகிறது. மத தத்துவங்கள் குழந்தைகளின் புரிதல்களுக்கு அப்பாற்பட்டவை. குழந்தைகளை தங்கள் மதத்தைச் சார்ந்தவர்களாக வளர்க்கவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். 'குழந்தைகளை வளர்க்காதீர்கள்; வளர விடுங்கள்' என்று அறிஞர் பெர்னாட்ஷா கூறியதை மறந்து விடக்கூடாது.
அடுத்து, குழந்தை இலக்கிய குறிக்கோளாக பிள்ளைகளிடம் மொழிப்பற்றை ஏற்படுத்துவது என்பதாக இருக்கிறது. குழந்தைகள் பள்ளிக்கு போக வேண்டும், பாடம் படிக்க வேண்டுமென்பது பற்றி கவிமணி முதல் ஈரோடு தமிழன்பன் வரை அழகான பாடல்கள் எழுதியுள்ளார்கள் சற்று வித்தியாசமாக.
பெண்கல்வியை வலியுறுத்திய பாரதிதாசன் இசைப்பாடல் :
" தலைவாரி பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை "
என்று ஒரு தந்தை பாடுவதாக அப்பாடல் அமைந்திருந்தாலும் அது அற்புதமான பாடலே !
பாரதியும் கூட பெண் குழந்தைக்கு முக்கியத்துவம் தர வேண்டுமென்பதற்காக ‘கண்ணன் என் குழந்தை’ என்று பாடாமல் ‘கண்ணம்மா என் குழந்தை’ என்று பாடியுள்ளது கவனிக்கத்தக்கது.
குழந்தை இலக்கியம் மொழித்திறன்களை குழந்தைகளுக்கு வழங்குகிறது என்பது உண்மை. ஆனால் குழந்தை இலக்கியம் தமிழ்மொழியில் படி என்று அறிவுரை வழங்கிக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதை
தொழுது படித்திடடி பாப்பா ’ என்று பாரதி ஆரம்பித்து வைத்த கடவுள் வணக்கத்திற்கு அடுத்த படியான மொழி வணக்கத்தை எல்லா புலவர்களும் பிடித்துக் கொண்டார்கள். இது தவிர பாவலரேறு பெருஞ்சித்தரனார், ‘தமிழும் ஆங்கிலமும் தவறாது கற்பாய்’ என்ற பாடலில்,
‘எனவே தம்பி இனிமைத் தமிழுடன்
ஆங்கில மொழியிலும் அறிவைப் பெறுக, நீ !
‘அகம்’ தமிழ்மொழியெனில் ஆங்கிலம் ‘புற’ மாம் !
இரு மொழிக்கொள்கை, மும்மொழிக் கொள்கை என்பதெல்லாம் குழந்தைகளின் பிரச்சனையல்ல. அது பெற்றோரின் பிரச்சனை. குழந்தை எந்த மொழியில் படிக்க வேண்டுமென்பதை பெரியோர் தீர்மானிக்கிறார்கள். அந்த மொழி இந்தமொழி என்று கூறி சொந்த மொழியை அனாதையாக்கியவர்கள் குழந்தைகள் அல்ல. தாய்மொழியில் கல்வி என்பது குழந்தையின் உரிமை. எத்தனையோ உரிமைகள் குழந்தைகளுக்கு மறுக்கப்பட்டுள்ளன. ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு ’ என்று பேசுபவர்கள் படிப்புக்கு எது என்பதை உணர்ந்தார்களா ? மொழிப்பற்றை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டுமென்று பேசுபவர்கள் அதை விளக்கினால் நல்லது !
மொழிப்பற்றைப் போல்தான் நாட்டுப்பற்றும், நாலு வரி எழுதினாலும் குழந்தைகளுக்கு நாட்டுப்பற்றைப் பற்றி எழுதாதவர்கள் இல்லை.
‘அமிழ்தில் இனியதடி பாப்பா ! நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா !
என்று பாரதி ஆரம்பித்து வைத்தார். பல வகையாகப் பரவிடும் பரம்பொருள் பற்றி பேசும் பாரதி ஆன்றோர் தேசம் என்று எதைக் குறிப்பிடுகிறார் ? குழப்பம் இல்லையா !
‘அன்பென்று கொட்டு முரசே - மக்கள்
அத்தனை பேரும் நிகராம் ;
இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்,
உடன் பிறந்தவர்களைப்போல் - இவ்
வுலகில் மனிதரெல்லாரும் !
இடம் பெரிதுண்டு வையத்தில் - இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர் ? இந்த கருத்து பாரதியின் முரசு பாடலில் வரும். இந்த கருத்துக்கள் தானே மண்ணில் மைந்தர்களாக வாழ்வதற்கு ஏற்புடையது. நாடுகளுக்கிடையிலான சண்டையில் நாட்டுப்பற்று எரியும் நெருப்பில் விடப்படும் எண்ணெய் ஆகிறது. போரினால் அதிகம் அல்லல்களை அனுபவிப்பவர்கள் குழந்தைகள் தான் என்பதை எல்லாரும் அறிவர். பிரிவினைகள், எல்லைகளற்ற பரந்த உலகம் குழந்தைகளுடையது. குழந்தை உலகத்தில் சுயநல வேலிகளைப் போடுபவர்கள் பெரியவர்கள் தான். குழந்தைகள் ஏற்றத்தாழ்வுகளை அறியாதவர்கள். அவர்களிடம் போய் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்கிறோம்.
பொய் என்றால் அதன் அர்த்தம் புரியாதவர்கள் குழந்தைகள். அவர்களிடம் போய் ‘பொய் சொல்ல கூடாது பாப்பா’ என்கிறோம். ‘திருடாதே பாப்பா, திருடாதே ! ’ என்று குழந்தைகளிடம் போய் பாடுகிறோம். தனியுடைமையை ஏற்படுத்தியது குழந்தைகளா ? குழந்தைக்காக என்று கூறி பெரியவர்கள் செய்த குற்றம் அல்லவா அது. பெரியவர்களுக்கு கூற வேண்டிய கருத்துக்களை குழந்தைகளுக்கு கூறிக் கொண்டிருக்கிறோம். குழந்தைப் பருவத்திலே கூறினால் மனதில் பதிந்துவிடுமாம். இப்படியரு நொண்டி சமாதானம் !
அடுத்து, குழந்தை இலக்கியத்தில் அதிக பங்கு வகிப்பது இயற்கையைப் போற்றுதல், உயிரினங்கள் மீது அன்பு ஆகியன.‘
‘நிலா  நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா ’ போன்ற நாடோடிப் பாடல்கள் குழந்தைகள் நிலாவைப் பார்த்து ரசித்த காலத்தைச் சேர்ந்தவை. கதவு, சன்னல்களை இறுகி மூடி அவைகளுக்கு சட்டையும் தைத்து போட்டு அறைக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் குழந்தைக்கு வளர்பிறை தெரியுமா ? தேய்பிறை தெரியுமா ?
‘ நறுக்கி எறிந்த நகத்தைப் போல
இருக்கும் நிலாவே - நீ
நகர்ந்து நகர்ந்து போவதெங்கே ?
சொல்லு நிலாவே ’
என்ற குழந்தைக் கவிஞரின் பாடல் உவமைத் தான் புரியுமா ?
குழந்தைகளுக்கு இயற்கையாகவே காகம், குருவி, கிளி, கோழி, ஆடு, மாடு இவைகளிடம் அன்பு உண்டு. பறவை, விலங்குகள் உலகத்தோடு இப்போது குழந்தைகளுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது ? அவைகளோடு பழக, உறவாட குழந்தைகளுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது ? ‘கான்கிரீட்’ உலகத்தில் வாழ்ந்து கொண்டு வெட்கமில்லாமல் 'கிளியே, கிளியே, பறந்து வா’ என்று குழந்தைகளைப் பாடச் சொல்கிறோம். கூண்டுக்கிளியின் சுதந்திரம் பற்றி குழந்தைகளிடம் பாடம் சொல்பவர்கள் குழந்தைகளின் சுதந்திரம் பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டுகிறேன்.
நாட்டுத் தலைவர்கள் பற்றியும், பழம் பெரும் கவிஞர்கள் பற்றியும் நிறைய எழுதப்பட்டு இதுவும் குழந்தை இலக்கியத்தின் குறிக்கோளாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இது குழந்தை இலக்கியமாகுமா என்பது புரியவில்லை. பாடத்திட்டம் சார்ந்து தரப்படும் இவ்வகை குழந்தை இலக்கியத்தில் உள்ள முரண்பாடுகள் பரிசீலனைக்கு உரியவை.
தமிழ் குழந்தை இலக்கியத்தின் குறிக்கோள்கள் கவிமணி, பாரதி, அழ.வள்ளியப்பா ஆகியோரிடமிருந்து பயிலப்பட்ட ஒன்றாகவே உள்ளது. பெரும்பான்மையோர் இம்மும்மூர்த்திகள் வகுத்த பாதையிலேயே சென்றுள்ளனர். பழகிய பாதை பலருக்கு சௌகரியமாக போனதைப் பற்றி விமர்சனங்கள் எழாமல் இல்லை. அழ.வள்ளியப்பாவின் சீடரான தம்பி சீனிவாசன் மத்திய அரசின் குழந்தை இலக்கியப் பரிசு பெற்றவர். ‘யூனிசெப்’ நடத்திய குழந்தை இலக்கியம் பட்டறையில் பயிற்சி பெற்றவர். இது குறித்து தனது பார்வையை வெளிப்படுத்தினார்.
‘குழந்தைக்கு என்று பாடல் எழுதும் போது திரும்ப திரும்ப வீட்டு மிருகங்கள், விளையாட்டுப் பொருட்கள், தாய், தந்தை போன்ற குடும்ப உறுப்பினர்கள் என்றே எழுதுகிறார்கள். பல குழந்தைப் பாடநூல்களைக் கவனித்தால் இந்தக்குறை நன்கு தெரியும். குறிப்பிட்ட 30, 40 பொருட்களைப் பற்றியே தான் எல்லா கவிஞர்களும் பாடல் இயற்றி இருப்பார்கள். புதிய கோணங்களில் பார்த்து, புதிய சந்தங்களில் அமைத்து எழுதத்தானா பொருட்களுக்குப் பஞ்சம் ? குழந்தையின் செயல்களைக் கவனித்தால் கற்பனை பெருகும். ’
கடைசி வரி முக்கியம். குழந்தை இலக்கியத்தில் குழந்தையின் உணர்வுகளும் எண்ணங்களும் செயல்களுமே வெளிப்பட வேண்டும். ஆனால் வெளிப்பட்டதெல்லாம் குழந்தை எழுத்தாளரின் எண்ணங்களும் உணர்வுகளுமே !
குழந்தையின் முகத்தை அகத்தைக் காட்டுவது போல் சில எடுத்துக்காட்டான பாடல்கள் இல்லாமல் இல்லை. அவை மிகக் குறைவே.
தம்பி சீனிவாசனின் ‘சிவப்பு ரோஜா’ தொகுப்பில் உள்ள ‘மீண்டும் வருமா ? ‘புரியவில்லை அம்மா ’ ஆகிய பாடல்கள் குழந்தையின் முகத்தை அகத்தை காட்டுவன.
கவிமணியின் ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு’ குழந்தையின் பார்வையிலிருந்து பாடப்படுவதாகும்.
'குழந்தைக் கவிஞன் தன் பார்வையால் எதையும் பார்ப்பதில்ல, குழந்தைக்குரிய கண்களால் காண்கிறான்' என்கிறார் அறிஞர் எமர்சன் குழந்தையின் கண்கள் வியப்பால் விரிபவை; வினா கேட்பவை,
'குரங்கின் அச்சம்' என்ற பாரதிதாசனின் பாடல் 'கீழிருக்கும் விழுதையெல்லாம் ஒளி பாம்பாய் என்ணி எண்ணி உச்சி மீது சென்று தன் வால் பார்க்கும்' என்று குழந்தையின் வியப்பை வெளிப்படுத்தும்.
ஷண்முக சுப்பையாவின் குழந்தைக் கவிதையான,

கண்ணன் என் தம்பி
காலையில் எழுவான்
ஓவென அழுவான்
அப்பா எழுந்து
ஏனெனக் கேட்பார்.
அம்மா வந்து
அப்பம் கொடுப்பாள்,
அப்பமும் தின்று
கையையும் கடித்து
அழுவான் பின்னும்
கண்ணன் என் தம்பி

குழந்தையின் கண்களில் எழும் கேள்வி உணர்வு இக்கவிதையில் ஆழ்ந்து உள்ளது.
" ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது " என்று நினைத்துக்கொண்டு குழந்தை இலக்கியத்தை சம்மட்டிகளாக ஆக்கி விடக்கூடாது.
குழந்தை இலக்கியம் குழந்தையை விடுதலை செய்ய வேண்டும். அதற்கு முதலில் தமிழ் குழந்தை இலக்கியத்தை அதன் பழைய குறிக்கோள்களிலிருந்து விடுதலை செய்வோம்.


Monday 18 March 2013

மாதுளம்பழம்


"கௌம்பிட்டியாடா பாலு..." அவனது புத்தகப் பையையும் தூக்கிக் கொண்டு கேட்டாள்  பட்டு ரோஜா. பாலு சின்னக்கண்ணாடியில் முகம் பார்த்து தலையை வாரிக்கொண்டான்.
"எப்படிக்கா இருக்கு?"
"ம்... நல்லாயிருக்கு... கௌம்புடா... லேட்டாப் போனா  மொதலாளியம்மா  திட்டுவாங்க..."
இரண்டு பேரும்  வெளியில்  வந்தார்கள்.  தம்பியை  ஸ்கூலில்  விட்டுவிட்டு  அவள்  வேலைக்குப்  போக  வேண்டும். காலையிலேயே அம்மாவும் அப்பாவும் பக்கத்து ஊரிலிருந்து கட்டிட வேலைக்கு கிளம்பியாயிற்று.
பட்டுரோஜா  நாதாங்கியைப்  போட்டுப்  பூட்டினாள். சாவியை எரவாணத்தில் செருகிவிட்டு  தம்பியின்  கைப்பிடித்து அழைத்துப்  போனாள்.
எதிரே  சீருடை  அணிந்து  சிறுவர்,  சிறுமிகள் அவசர அவசரமாய் நடந்தும் ஆட்டோவிலுமாய் போய்க் கொண்டிருந்தார்கள்.
பட்டுரோஜா கூட  பானு  படித்த  நகராட்சிப் பள்ளியில் நாலாவதுவரை படித்தாள். அதற்குமேல் அப்பாவால் முடியவில்லை. அந்த  சமயம்தான் சாரத்திலிருந்து  தவறி விழுந்தான்  நாகப்பன் அவள் அப்பா... பட்டுரோஜாவால் தம்பியைப்  பார்த்துக் கொண்டும்  ஆஸ்பத்திரிக்குச்  சாப்பாடு எடுத்துக் கொண்டும்  அதேசமயம் பள்ளிக்கூடமும் போக முடியவில்லை. "பேங்க்காரரு  வீட்டில  வேலைக்கு ஆள் கேட்டாங்க -  ஐநூறு  குடுத்தா  இப்பக்கி ரொம்ப  உதவியா இருக்கும்.. என்னா  சொல்றே  பட்டுரோஜா?" - என்று  கேட்டாள்.
பட்டுரோஜா ஒத்துக்கொண்டாள்... இரண்டுமூன்று வருஷமாய் அது தொடர்கிறது.
இரண்டு பேரும்  சாலையோரம்  போய்க்  கொண்டிருந்தார்கள்.
திடீரென   சீருடை   அணிந்திருந்த   சிறுமியருத்தி பட்டுரோஜாவின் கையைப் பிடித்தாள்.
"பட்டு ரோஜா... நல்லாயிருக்கியா?.." 
"யாரு.."
"நாந்தான் சத்தியா..." 
"ஓ.. சத்தியா..." - பட்டுரோஜாவுக்குச்  சந்தோஷம்  தாள  முடியவில்லை.  கூடப் படித்தவள்.
"ஏன்  நீ  மேலே  படிக்கலியா..." - கேட்டாள் சத்தியா
"அதுவா... அது... வசதியில்லே.." - மழும்பினாள் பட்டுரோஜா
"சரி.. வரேன்.."  -  சத்தியா போய்விட்டாள். அவளையே  ஏக்கத்துடன் பார்த்தாள் பட்டுரோஜா.
"அக்கா.." -  பாலு அவளை இழுத்தான்.
"என்னடா.."
"நிறையப் பணம்  கிடைச்சா  நீ  படிப்பியா  அக்கா?" - பாலு கேட்டான்.  பட்டுரோஜாவின்  முகம்  மலர்ந்தது.
"அப்புறம்?..  நிறையப் பணம்  கிடைச்சா  அப்பா  வேற  வேலை  செய்யும்..
என்னைய ஸ்கூல் சேர்க்கும்..ஹ்ம்.. இதெல்லாம் கனவுலதான் நடக்கும்.. வாடா போலாம்.."
அப்போது  சாலையோரப்  புங்கை மரத்தடியில்  சாக்கு விரித்து மாதுளம்பழங்களைக்  கொட்டி விற்றுக்  கொண்டிருந்த வியாபாரியை  பார்த்தான் பாலு. அதன் மீது நான்காக வெட்டிய மாதுளம்பழம் வைக்கப்பட்டுருந்தது. செக்கச்செவேலென்று  மாதுளை முத்துகள்  பளபளத்துக்  கண்ணைப் பறித்தன.
"அக்கா.... அக்கா..... மாதுளம்பழத்துக்கு ஆசையா இருக்குக்கா"
ஆவலாய்க் கேட்டான் பாலு.   அங்கிருந்து  நகராமல்  நின்று கொண்டான்.         
         "டேய் ..... ஸ்கூலுக்குப் போகணும்.... வா.... "
"ஹீகும்.... பழம் வாங்கித் தா... செவப்பா  இனிப்பா  இருக்கும் !
"சாப்பிட்டா  வாயெல்லாம்  செவப்பா  ஆவும்.... அன்னிக்கு சஞ்சய்கூட சாப்பிட்டான்.. அக்கா எனக்கு வேணும்க்கா...." அடம்பிடித்தான் பாலு
பட்டுரோஜா வியாபாரியை நெருங்கி   "பழம் எவ்வளவுங்க ?"  என்று  கேட்டாள்.
"இருபது ரூபாய் குடும்மா"  என்றார்.
பட்டுரோஜா பாலுவிடம் குனிந்து மென்மையாகச் சொன்னாள்.
"பாலுக் கண்ணா... நீ ஸ்கூல் போயிட்டு வா... நானும் வேலைக்குப் போற  இடத்துல  பணம்  வாங்கிட்டு வரேன்... சாயந்திரம்  இதே  இடத்துல  வந்து  வாங்கிடுவோம்".... பாலு யோசித்தான்.... பணம்  இல்லாமல் வாங்க முடியாதென்று அவனுக்குத்  தெரியும் ! எப்படியும் அக்கா சாயந்திரம் வாங்கிடுவாள் என்று நம்பினான்.
"நாம வர்ரதுக்குள்ளே வித்து தீந்துடுச்சுன்னா ? ... என்று கேட்டான்.
            "சீச்சீ...... இருக்கும்...... "
அவனைப்  பள்ளியில்  விட்டுவிட்டு வேலை பார்க்கும் வீட்டுக்கு வந்தாள். பாட்டியம்மா மட்டும் சோபாவில் படுத்திருந்தாள்.
"எவ்வளவு நேரம் கழிச்சு வரே" .... என்றாள் கோபமாக.
"இல்லீங்கம்மா... நிமிஷத்துல வேலை முடிச்சுடுவேன்.... "
"அதுக்குன்னு  பாத்திரத்தை சோப்போட  வச்சுடாதே... சுத்தமா கழுவு..... "
அவரது மகனும் மருமகளும் வேலைக்குப் போயிருந்தார்கள்... பட்டுரோஜா கடகடவென்று பாத்திரங்களைச்  சுத்தமாக கழுவினாள். இங்கு  என்றில்லை  வீட்டிலும்  அவள்  பிறகு  சுத்தமாக  கழுவுவாள். ஆனால் பாட்டியம்மா நம்பமாட்டாள். 
பிறகு வீடுபெருக்கி துடைத்தாள். மிஷினிலிருந்து துணிகளை எடுத்து மாடியில் உலர்த்தினாள். பாட்டியம்மாவிடம்   எப்படிப்   பணம் கேட்பது?  என்று தயக்கமாக இருந்தது. 
"பட்டு ரோஜா.... நாளையிலிருந்து  லேட்டா   வரக்கூடாது... புரிஞ்சுதா ?"   எச்சரித்தாள்.... பாட்டி.
"சரிங்கம்மா.... " சொல்லிவிட்டு நின்றாள்.
"அப்புறமென்ன.... கிளம்பு... நான்  தூங்கணும்..."
"வந்து..... இருபது ரூபா .... கடனா...."  கேட்டே விட்டாள்.
"ஒங்கம்மா  முந்நூறு ரூபா  கடன்   வாங்கியிருக்கு..... போ..போ..."
அழுகை பொங்க வெளியே வந்தாள்.  ச்சே ஏழைகள்!  என்றால்  எல்லாருக்கும்  இளப்பம் தான்...  என்ன செய்வது ?
தம்பியின்  ஸ்கூலை  நோக்கி நடந்தாள். அவள்   மேட்டின்மீது  ஏறுகையில்  ஒரு  கிழவர்   தள்ளு  வண்டியில் காய்கறி  மூடைகளை ஏற்றி  மேட்டின்மீது   ஏற்றினார்.  அவரால் கொஞ்சமும்  தள்ள  முடியவில்லை. மேல்மூச்சு   கீழ்மூச்சு   வாங்க   முயற்சி   செய்து  கொண்டிருந்தார்.   பட்டுரோஜா   ஓடிப்போய்   வண்டியைத்   தள்ளினாள். இரண்டு  பேரும் சேர்ந்து கஷ்டப்பட்டு மேட்டின்மேல்   ஏற்றினார்கள்.
"போதும் பாப்பா..... இனிமே நானே தள்ளிக்கிறேன்" என்றார் கிழவர்
"இருக்கட்டும் தாத்தா.... வண்டி எங்கே போவணும் ? "
"வள்ளி விலாஸ் ஓட்டல்.... "
"வாங்க   தாத்தா..... எனக்கும் அந்த வழியாப் போவணும்....
ஓட்டல் வாசலில் வண்டியை நிறுத்தினாள்.
"பெரிய உதவி செஞ்சே பாப்பா..... ரொம்ப நன்றி.... இந்தா முப்பது ரூபா பணம்...."
  பட்டுரோஜா பதறிப் போனாள்.
"அய்யய்யோ.... எதுக்கு.... நானு   சும்மா தள்ளிக்கிட்டு வந்தேன்...."  
"இல்லடா ... என்  கூலி  எழுபது  ரூபா.... பாதிதூரம்   நீ  தானே தள்ளிக்கிட்டு வந்தே.... இதுதான் நியாயம்.... " பிடிவாதமாக சொன்னார்.
"அப்படின்னா இருபது ரூபா போதும் ... " இருபது ரூபாயை எடுத்துக்கொண்டு, கடவுளே உன் வழிகளை யார் அறிவார் ?
சந்தோசமாக பாலுவின் ஸ்கூல் எதிரே உள்ள மரத்தடியில் உட்கார்ந்து கொண்டாள். அப்படியே கண்ணை இழுத்து விட்டது.. நாலுமணிக்கு "கணகண" வென மணி அடித்ததும் எழுந்தாள். பாலு ஆசையாய் ஓடிவந்தான்.
‘‘அக்கா ’’
‘‘வாடா வீட்டுக்கு போகலாம் ’’ 
‘‘அக்கா... மாதுளம்பழம் .... ’’ நினைப்பாய் கேட்டான்
‘‘வாங்கலாம்.... வாங்கலாம்... ’’
இரண்டுபேரும் நடந்தார்கள். பாலுவிடம் கதைபேசிக் கொண்டே மாதுளம்பழ வியாபாரியிடம் வந்தாள்.. அவளுக்கு திக்கென்றது... சாக்கில் ஒரு பழம் கூட இல்லை.
  ‘‘ஏங்க பழம் இல்லியா ? ’’ அழுகையோடு கேட்டாள். பாலுவின் முகம் இருண்டுவிட்டது. 
‘‘எல்லாமும் வித்துப் போச்சு.... ரெண்டே ரெண்டு பழம் மீந்து கிடக்கு.... ’’ கூடையிலிருந்து ரெண்டு பழம் எடுத்துக்  கொடுத்தார்.   ஒன்று நசுங்கியிருந்து.... இன்னொன்று சுமாராக இருந்தது.
‘‘ இருபது  ரூபா வேணாம்..  பத்துரூபா  குடு... ’’ என்றார் வியாபாரி. பழங்களை வாங்கிக்  கொண்டு வீடு வந்தார்கள். 
ஒரு கிண்ணத்தை  எடுத்து  பழத்தை  எடுத்து  உடைத்து  உதிர்த்தாள்.  மாதுளம் பழத்தை  தம்பி ஆசையோடு சாப்பிடுவதைப்   பார்த்தாள்.  தனக்கு பணம்  தந்த  வண்டிக்கார  கிழவரை  நன்றியுடன்  நினைத்தாள்.


                                                                         சூ.ஜூலியட் மரியலில்லி

குரங்கு


குன்று காடு ஊர்ப்புறங்களில்
குரங்குக் கூட்டம் வாழும்
கோயில்களில் தோப்புகளில்
கும்பலாகச் சூழும்

ஒன்றையன்று துரத்திக் கொண்டு
ஓடி மரத்தி லேறும்
ஓட்டுதற்கு எவர் சென்றாலும்
"உர்... உர்..." என்றே சீறும்

குட்டியினை மார்பிலணைத்துக்
கொண்டே எங்குந் திரியும்
கொம்பு விட்டுக் கொம்பு தாவி
குதித்தே விந்தை புரியும்

பட்டுத்தலை மயிர் விலக்கிப்
பார்த்துப் பேனை பொறுக்கும் !
பரபரப்பாய் உடலைச் சொறிந்த
படி திரிந்தே இருக்கும்

கொம்பிலேறி நின்று குதித்துக்
குதித்து அதனை உலுக்கும்
கோபம் வந்தால் கத்திக் கடித்துக்
குதறும் : சண்டை வலுக்கும்

கம்பெடுக்கும் குரங்காட்டியின்
கட்டளைபோல் நடக்கும்
காண்பவர்க்கு வியப்பு வந்து
கண்களிலே கிடக்கும்.

திட்டக்குடி முத்துமுருகன்

Thursday 17 January 2013

அச்சம் தவிர்


ஞாயிற்றுக்கிழமை என்பதால் சற்று சாவகாசமாக எழுந்திருக்கலாம் என்று நினைத்த கோகுல் திடீரென்று சேகர் மாமாவின் குரல் கேட்டு விழித்துக் கொண்டான். கோகுலின் அம்மா கல்யாணியின் அண்ணன்தான் சேகர். வியாபார வி­யமாக வருபவர் கோகுலுக்குப் பிடித்த பலகாரங்களை வாங்கி வருவார். அவனுக்குப் பிடித்த சினிமாவுக்குக் கூட்டிப் போவார். மாமா ஊரிலிருக்கும் வரையில் கோகுலுக்கு உற்சாகம் சிறகடிக்கும். மகிழ்ச்சியாகப் பொழுது கழியும்.
சென்ற முறை சேகர் மாமா வந்திருந்தபோது மாமா அடுத்தமுறை வரும்போது எப்படியும் என்னோடு பத்து நாட்களாவது இருக்க வேண்டும் என்று கோகுல் கேட்டுக் கொண்டான். அவனது மாமாவும் சரி என்று சொல்லியிருந்தார்.
மாமாவைப் பார்க்கும் ஆசையோடு படுக்கையிலிருந்து எழுந்து ஓடி வந்தவன் அப்படியே திடுக்கிட்டு நின்று விட்டான். அவன் நின்றதற்கு காரணம் சேகர் மாமாவின் கையிலிருந்த வெள்ளை நாய்க்குட்டி.
சேகருக்கு நாய் என்றாலே பயம்! தெருவில் போகும்போது தூரத்தில் நாயைக் கண்டாலே கோகுலுக்கு கை, கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்து விடும். கடந்த ஒரு வாரமாக தெருமுனையில் இருக்கும் கடைக்குக்கூட அவன் போவதில்லை. காரணம் அந்தக் கடையின் அருகில் கறுப்பு நாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.
அம்மா கோகுலிடம் மளிகை சாமான் ஏதேனும் வாங்கி வரச் சொன்னால் தெரு முனையில் இருக்கும் கடையை விட்டு விட்டு மாற்று வழியாக அடுத்த தெருவிலிருந்த கடையில்தான் சாமான் வாங்கிக் கொண்டு வருவான்.
தெருமுனையிலிருக்கும் கடைக்குப் போய்விட்டு வர எதற்கு இவ்வளவு நேரம்? என்று இரண்டு நாட்கள் முன்பு அம்மா அவனிடம் கேட்டபோதுதான் அம்மாவிடம் நாயைப் பற்றிச் சொன்னான்.
ஏண்டா கோகுல் பதிமூணு வயசாச்சு உனக்கு. உன்னைவிடச் சின்னக் குழந்தைங்க எல்லாம் நாய்க்கு பயப்படாமப் போகுது. உனக்கு மட்டும் என்ன பயம்...? என்று அம்மா கல்யாணி கேட்டாள்.
அந்த நாய் என்னைக் கண்டதும் என்கிட்டே ஓடிவந்து என்னோட காலை முகந்து பார்க்குது. அது என்னைக் கடிச்சுடுமோன்னு பயமாயிருக்கும்மா. நான் கடைக்குப் போய்வர லேட்டாகுதுன்னா இனி நீயோ அப்பாவோ கடைக்குப் போய் வாங்கிக்கோங்க. கோகுல் அம்மாவிடம் தீர்மானமாகச் சொல்லி விட்டான்.
ஆனால் இன்று அவனுக்கு ரொம்பவும் பிடித்த சேகர் மாமா வீட்டுக்குள்ளேயே நாய்க்குட்டியை எடுத்து வருவார் என்று அவன் எதிர்பாக்கவேயில்லை. மாமாவின் கையில் நாய்க்குட்டியைப் பார்த்தவன், மாமாவிடம் சரிவர பேசக்கூட இல்லை. ஓடிச்சென்று படுக்கை அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான்.
நாய் என்றாலே எனக்கு பயம் என்று தெரிந்தும் மாமா நாய்க்குட்டியைக் கொண்டு வந்துவிட்டாரே என்று அவனுக்கு கோபம் வந்தது. சேகர் மாமா பலமுறை கோகுலை அழைத்தும் அவன் வெளியே வரவேயில்லை. சிறுது நேரம் கழிந்தது.
கோகுல் நாய்க்குட்டியைக் கட்டிப் போட்டுட்டேன் என்று வெளியிலிருந்து மாமா குரல் கொடுத்த பிறகுதான் அவன் மெதுவாக வெளியே வந்தான். சேகர் மாமா நாய்க்குட்டியை சிறிய தோள் பட்டையால் வராண்டாவில் கட்டிப் போட்டிருந்தார். அதன் அருகில் இருந்த கிண்ணத்தில் கொஞ்சம் பாலும் இருந்தது. வெள்ளை நிறத்திலிருந்த அந்த நாய்க்குட்டி பாலைக் குடித்துவிட்டு வக் வக் வக் என்று குரைத்தபடி வராண்டாவையே சுற்றி சுற்றி வந்தது. கோகுல் நாய்க்குட்டியின் அருகே செல்லவேயில்லை. தூரத்திலிருந்தபடியே நாய்க்குட்டியைப் பார்த்துப் போனான். இரண்டு நாட்கள் இப்படியே கழிந்து விட்டன.
மறுநாள் சேகர் மாமா கோகுலிடம் நாய்க்குட்டிக்கு பால் கொண்டு வைக்கும்படிச் சொன்னார். இரு நாட்கள் நாய்க்குட்டியைப் பார்த்து பழகிவிட்டதால் கோகுலுக்கு ஓரளவு தைரியம் வந்திருந்தது. அவன் கிண்ணத்தில் கொஞ்சம் பாலை எடுத்துக் கொண்டு போய் நாய்க்குட்டியின் அருகில் வைத்துவிட்டு ஓடி வந்துவிட்டான்.
 கோகுல் நாய்க்குட்டியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கோகுல் எதிர்பார்க்காதபடி நாய்க்குட்டியை அவிழ்த்து விட்டார் சேகர் மாமா. நாய்க்குட்டி அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தது. வீல் என்று அலறிய கோகுல் பயந்து போய் நாற்காலி மீது ஏறி நின்று கொண்டான்.
கோகுல் நாய்க்குட்டி உன்னை ஒன்றும் செய்யாது. நீ பேசாமல் தரையில் இறங்கி நில்லு என்று அவனுக்குத் தைரியம் சொன்னார் சேகர் மாமா. ஆனால் கோகுல் நாற்காலியை விட்டு கீழே இறங்கவில்லை. ஆனால் அடுத்து வந்த இரண்டு நாட்களில்  கோகுலுக்கு நாயக்குட்டி மீதான பயம் இன்னமும் குறைந்து விட்டது. அவன் நாய்க்குட்டியின் அருகில் சென்று அதன் முதுகில் தடவிக் கொடுக்கும் நிலைக்கு வந்திருந்தான். அடுத்த சில நாட்களில் நாய்க்குட்டி மீதான பயம் சேகரிடம் கிட்டத்தட்ட நீங்கிவிட்டது.
ஒரு வாரத்தில் நாய்க்குட்டி ஓரளவு வளர்ந்து விட்டது. நாய்க்குட்டியும் கோகுலும் இப்போது ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கியிருந்தார்கள். கோகுல் நாய்க்குட்டிக்கு பால், பிஸ்கெட் எல்லாம் தின்னக் கொடுத்தான். தனது நாய்க்குட்டிக்கு டைகர் என்று பெயரும் வைத்து விட்டான். தினமும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நாயுடன் விளையாடினான். மாலைப் பொழுதில் நாய்க்குட்டியின் தோள்பட்டையை பிடித்தபடி கோகுல் அதை வெளியே அழைத்துச் சென்றான்.
சேகர் மாமா ஊருக்குப் புறப்படும் நாளும் வந்தது. மாமா கோகுலை அழைத்து கோகுல் தெருமுனைக் கடைக்குப் போய் ஒரு சோப் வாங்கிட்டு வா என்றார். மாமாவிடம் காசை வாங்கிய கோகுல் இரண்டு நிமிடத்தில் சோப்பை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.
கோகுல் எப்படி இவ்வளவு சீக்கிரம் சோப் வாங்கிட்டு வந்துட்டே? நீ தெருமுனையில இருக்கிற கடைக்குப் போக மாட்டேன்னு அம்மா சொன்னாளே! இப்போ நீ கடைக்குப் போனப்போது அந்த கறுப்பு நாய் இல்லையா? கோகுலின் மாமா ஒன்றும் அறியாதவர் போலக் கேட்டார்.
அம்மா எல்லாத்தையும் சொல்லிட்டாங்களா மாமா! போன வாரம் வரைக்கும் எனக்கு அந்த நாய் மேல பயம் இருந்தது மாமா. ஆனா இப்போ பயமில்லை. இப்பவும் அந்த கறுப்பு நாய் என் பின்னாலே வந்துச்சு. நான் பிஸ்கெட் வாங்கிப் போட்டேன். பிஸ்கெட்டைச் சாப்பிட்டுட்டு அது என்னைப் பார்த்து வாலை ஆட்டிச்சுது ! என்று பதில் சொன்னான் கோகுல்.
தூரத்துல நாயைப் பார்த்தாலே பயந்து ஓடுகிற உனக்கு எப்படித் தைரியம் வந்துச்சுன்னு தெரியுதா கோகுல்? மாமா கேட்டார்.
தனக்கு எப்படி அந்தத் தைரியம் வந்தது? என்று கோகுலுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. தெரியலை மாமா, எனக்கு எப்படி அந்தத் தைரியம் வந்துச்சு? மாமாவிடம் கேட்டான் கோகுல்.
இங்கே பாரு கோகுல் நீ நாய்க்குப் பயப்படுறதைப் பற்றி அம்மா என்கிட்ட போன்ல சொன்னாங்க. உன்னோட பயத்தைப் போக்கணும்னுதான் நான் ஊரிலயிருந்து நாய்க்குட்டியைக் கொண்டு வந்தேன். நாம எதையோ நினைச்சுப் பயப்படுறோம்னா அதுக்குக் காரணம் அதை விட்டு விலகி நின்று பார்க்கிறதாலதான்! இப்போ நாயை அருகிலேயே பார்த்து பழகிட்டதாலே உனக்கு நாய் மீதான பயம் போயிடுச்சு.
...நீச்சல் கத்துக்கணும்னா முதலில் தண்ணீரைக் கண்டு பயப்படக்கூடாது. சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும்னா சைக்கிளைக் கண்டு பயப்படக்கூடாது. பள்ளிக்கூட பாடம் கூட அப்படித்தான். ஒரு பாடத்தைப் புரிஞ்சுக்கணும்னா அந்தப் பாடத்தைக் கண்டு பயப்படாம நிதானமா ரெண்டு தடவை படிச்சுப் பார்த்தாலே போதும். அது நமக்கு எளிதா மாறிடும்! கோகுல் இந்த உத்தியை நீ வாழ்க்கை முழுவதும் பயன்படுத்துனா எதைக் கண்டும் பயம் தோன்றாது. புரிஞ்சுதா? சேகர் மாமா கேட்...
வாழ்க்கையின் மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டவனாக புரிஞ்சுது மாமா என்றான் கோகுல்.

‡                                                                                                                    கீர்த்தி



Wednesday 16 January 2013


அனுமாரும் அணிலாரும்


அனுமாருக்கும் வாலதிகம்
அணிலாருக்கும் வாலதிகம்
அதனால்தான் ராமாயணத்தில்
அவ்விருவருக்கும் பேரதிகம்

அனுமார் அரிய பணி செய்தார்
அணிலார் ஆன பணி செய்தார்
ஆனால் ராமர் இருவரையும்;
அகிலம் புகழும்படி செய்தார்!



புலி ஆடு புல்கட்டு

புலி ‡ஆடு‡ புல்கட்டு
மூணையும் படகில் ஏற்றிக்கிட்டு
ஆற்றைக் கடக்கணும் வெங்கட்டு
ஆனா படகிலே இடத்தட்டு

புலி‡ஆடு‡புல்கட்டு
எதுவோ ரெண்டை இட்டுகிட்டு
போனா இல்லே இக்கட்டு
போட்டான் திட்டம் வெங்கட்டு

ஆட்டையும் புலியையும் விட்டுட்டு
அங்கட்டுப் போனா இங்குட்டு
ஆட்டை வரிப்புலி தின்னுப்புடும்!
ஆட்டையும் புல்லையும் வெச்சுட்டு 
அங்குட்டுப் போனா இங்குட்டு
ஆடு புல்கட்டை மேஞ்சப்புடும்

இங்குட்டுப் புல்கட்டை வெச்சுட்டு
ஆட்டையும் புலியையும் இட்டுகிட்டு
ஆற்றைக் கடந்தான் வெங்குட்டு
அங்குட்டுப் புலியை விட்டுட்டு
கட்டை மட்டும் இட்டுகிட்டு
இங்குட்டு வந்தான் வெங்குட்டு

இப்போ ஆடு ‡ புல்கட்டு
ரெண்டையும் படகில் ஏற்றிகிட்டு
ஆற்றைக் கடந்தான் வெங்குட்டு!

புலி‡ஆடு‡புல்கட்டு
மூணையும் ஊர் கொண்டு சேர்த்துட்டு
படகைத் துறையிலே கட்டிட்டு
பசிச்சுச் சாப்டான் வெங்குட்டு!
படுக்கப் போனானோ எங்குட்டு?


லெமன்